மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதில் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மாவட்ட எல்லையான மருதூர் செக் போஸ்டில் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த தஞ்சையைச் சேர்ந்த கலைவாணன் என்பவரின் காரை சோதனை செய்தனர். அப்போது. அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ரூ.4,80,000 பணம் கொண்டுவரப்பட்டது தெரியவந்ததை அடுத்து அதனை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் காரை சோதனையிட்டனர். அப்போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1,03,500 பணத்தினையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களின்றி இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சத்து 83 ஆயிரத்து 500 பணத்தினை குளித்தலை கோட்டாட்சியர் வசம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment